Friday, July 15, 2011

////

புதுடெல்லி : மும்பையில் கடந்த புதன்கிழமை மூன்று இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை சோஷியல் டெமோக்ரேடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. கண்டிக்கத்தக்க கோழைத்தனமான இச்செயல் நடுங்கச்செய்ததாகவும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் எஸ்.டி.பி.ஐ-யின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், காயமடைந்தவர்கள் ஆகியோரின் துயரத்தில் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை மனிதத்தன்மை விரோதமானது என குறிப்பிட்ட இ.அபூபக்கர், இதன் பின்னணியில் செயல்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். நிரபராதிகளை கொலைச் செய்வது நியாயப்படுத்தமுடியாததும், பண்பாடற்ற செயலுமாகும்.

அனைத்து சமூக மக்களும் வாழும் ஒரு நகரத்தில் பிரிவினையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்ட கூட்டுப்படுகொலையாகும் இது. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் ஏதேனும் ஒரு பிரிவினரை நோக்கி விரலை சுட்டிக்காட்டுவதிலிருந்து புலனாய்வு ஏஜன்சிகளும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் விலகவேண்டும்.

ஊகங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பல நிரபராதிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. கடந்த காலங்களில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த நிரபராதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உண்மையான குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டபிறகும், நிரபராதிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. ஏதேனும் ஒரு மதத்தையோ, பிரிவினரையோ, சமுதாயத்தையோ முற்றிலும் குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக தீவிரவாதத்தை தனிமைப்படுத்துவதிலும், எதிர்கொள்வதிலும் மத்திய-மாநில அரசுகள் சந்தர்ப்பசூழலுக்கு தகுந்தவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

நிரபராதிகள் கொடுமைக்கு ஆட்படுத்தாதவிதம் ஒவ்வொரு வழக்குகளையும் ஆதாரங்களின் அடிப்படையில் கையாளவேண்டும் என இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Sunday, July 10, 2011

////

நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் காவல் துறை!

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்த SDPI திட்டம்.

சென்னை துறைமுகம் பகுதியை சேர்ந்த முகமது காசிம் என்பவருக்கு சொந்தமான கடை மண்ணடி தெருவில் உள்ளது. இவர் தன்னுடைய கடையை கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொய்யா சையது என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அ.தி.மு.க விசுவாசியான கொய்யா செய்யது, பல்வேறு சட்ட விரோத தொழில்களை செய்து வருபவர். நிலம் அபகரிப்பு, உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இவர்மீது உள்ளது. இந்நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கொய்யா செய்யது தனக்கு கடை நடத்த விருப்பமில்லை என்றும் இதனால் தன்னுடைய நண்பருக்கு கடையை மாத்திவிட போவதாகவும் கடை உரிமையாளர் முகமது காசிமை மிரட்டி சம்மதிக்க வைத்திருக்கிறார். இதனையடுத்து 3 வருடத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் முடிந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. மேலும் கொய்யா செய்யது வாடகைக்கு இருப்பவரிடம் கடந்த மூன்று வருடமாக ரூ 15,000 பெற்று வருகிறார். 15,000 வாடகை வாங்கிக் கொண்டு, ரூ 3,000 மட்டுமே கடை உரிமையாளர் முகமது காசிமுக்கு சென்ற வருடம் வரை கொடுத்து வந்தார்.

ஆனால் கடந்த ஒரு வருடமாக கடை வாடகை ரூபாய் மூவாயிரத்தையும்(ரூ 3,000) கூட செலுத்துவதில்லை. இதனால் கடை உரிமையாளர் முகமது காசிம் கடந்த ஒரு வருடமாக கடையை காலி செய்ய வலியுறுத்தியும், கொய்யா செய்யது கடையை காலி செய்யவில்லை. மேலும் இவருடன் சேர்ந்துகொண்டு அ.தி.மு.க வின் பகுதி செயலாளர் சோமு சேகர் என்பவரும் கடையை காலி செய்ய வேண்டுமானால் 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காலி செய்ய முடியாது எனக் கூறிவிட்டனர். இந்நிலையில் கடை உரிமையாளர் முகமது காசிம், SDPI சென்னை மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு “நீதி வேண்டி மனு” கொடுத்தார். இதனையடுத்து SDPI நிர்வாகிகள், பிரச்சனையில் தொடர்புள்ள அனைவரையும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே சந்தித்து பேசி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண முற்பட்டனர். ஆனால் கொய்யா செய்யது , சோமு சேகர் உள்ளிட்ட அ.தி.மு.க வினர் பணம் கொடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.(மேலும் கொய்யா செய்யது SDPI நிர்வாகிகளிடம், “உங்கள் கட்சிக்கு ரூபாய் 1 லட்சம் நன்கொடை தருகிறேன். இந்த பிரச்சனையில் நீங்கள் தலையிடாதீர்கள்”, என்று கூறியதை SDPI நிர்வாகிகள் கண்டித்து நிராகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

இது தொடர்பாக SDPI நிர்வாகிகள் ஆலோசனையின் படி காவல் நிலையத்தில் முகமது காசிம் கொடுத்த புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்து விட்டனர். இதனையடுத்து சட்ட ரீதியான அடுத்த கட்ட நடவடிக்கைகளை SDPI மேற்கொண்டது. நேற்று (9.7.2011 அன்று) இரவு 8.30 மணியளவில் கடை உரிமையளர் முகமது காசிம், வாடகைக்கு இருந்தவரிடம் கடை வாடகை கேட்கச் சென்றார். அவர்கள் “வாடகையை கொய்யா செய்யதிடம்தான் கொடுக்க முடியும், உங்களிடம் கொடுக்க முடியாது” என்று பதிலளித்தனர். இதனால் அவர் SDPI நிர்வாகிகள் உதவியுடன் கடை ஊழியர்களை வெளியில் அனுப்பிவிட்டு கடைக்கு பூட்டு போட்டார். இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாத அ.தி.மு.க வின் கொய்யா செய்யது, சோமு சேகர் மற்றும் அ.தி.மு.க வை சேர்ந்தவர்கள் காவல் துறையின் உதவியுடன் பூட்டை உடைக்க முயற்சி செய்தனர். இதற்கு கடை உரிமையாளர் மற்றும் SDPI நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அ.தி.மு.க கும்பல் SDPI நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தற்காப்பில் ஈடுபட்ட SDPI தொண்டர்கள் அ.தி.மு.க வினரை அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தினர். இவையனைத்தும் காவல்துறை முன்னிலையிலே நடைபெற்றது. பிரச்சனையை நன்கு உணர்ந்த காவல்துறை அ.தி.மு.க வினருக்கு ஆதரவாகவே செயல்பட்டது. அது மட்டுமல்லாமல் இரவோடு இரவாக காவல்துறையினர் துணை கமிஷனர் முரளி தலைமையில், கடையின் பூட்டை உடைத்து சட்ட விரோதமாக உள்ளே நுழைந்தனர். மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக புகார் கொடுக்க குஈகஐ ன் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று(9.7.2011) இரவு 11 மணியளவில் பாரிஸ் காவல் நிலையம் சென்றனர். அதேபோல் நூற்றுக்கணக்கான அ.தி.மு.க வினரும் காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். ஆனால் காவல் துறை, SDPI யினர் யாரும் இங்கே இருக்கக்கூடாது, காலையில் பேசிக் கொள்வோம் கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். SDPI ன் நிர்வாகிகள் கொடுக்க வந்த புகாரையும் ஏற்க மறுத்து தடியடி நடத்த உத்தரவிட்டார் துணை கமிஷனர் முரளி.

இதனையடுத்து SDPI மாவட்ட நிர்வாகிகள் இப்போதைக்கு கலைந்து செல்லுங்கள் என்று தொண்டர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனையடுத்து காவல்துறை தன்னுடைய வேலையை காட்டத் தொடங்கியது. அ.தி.மு.க வினரிடம் புகாரை பெற்றுக் கொண்டு, SDPI நிர்வாகிகளின் வீடுகளில் இரவோடு இரவாக சென்று தேடுதல் வேட்டை நடத்தியது. மேலும் SDPI நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை. கடையை ஆக்கிரமித்து அராஜகம் புரிந்தவர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டிய காவல்துறை, அவர்கள் ஆளும் கட்சியினர் என்பதால் கடை உரிமையாளர் மீதே நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆட்சியில் நிலம் ஆக்கிரமிப்பு , கட்ட பஞ்சாயத்து ஆகியவை பெருகி இருப்பதாகவும், ஆனால் இனிவரும்காலங்களில் அதுவெல்லாம் நடக்காது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அது போல் கடந்த காலங்களில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் மீது தற்போது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தனது சொந்த கட்சியினரே இது போன்று சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவதை தடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உள்ளது.

காவல் துறையினரின் பொய்ப்பிரச்சாரம்

இந்நிலையில் காவல்துறையினர் நடந்த சம்பவம் குறித்து அனைத்து ஊடகங்களிலும் தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். சம்பவத்தின் போது நடந்த சிறு கைகலப்பில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. அதுபோல் யாருடைய பணமோ, பொருளோ கொள்ளையடிக்கப்படவும் இல்லை. அதுபோல் பிரச்சனையானது SDPI க்கும் அதிமுகவின் பிரமுகருக்கும் இடையேதான் நடந்தது. ஆனால் ராஜ் டிவி SDPI க்கும் மனித நேய மக்கள் கட்சிக்கும் இடையே மோதல் என்று தவறுதலாக செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல் கலைஞர் தொலைக்காட்சியும் சம்பவத்தின் போது பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இச்சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெருவதாகவும், தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் காவல்துறை SDPI க்கு எதிராக நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் மாபெரும் போராட்டத்தை நடத்த SDPI திட்டமிட்டு வருகிறது.


////
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி SDPI சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் SDPI மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி தலைமையில் நடந்தது. ஊழலைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களிலும் ‘லோக் ஆயுக்தா‘ அமைப்பு அமைக்கப்பட்டு செயல்படுகிறது. அது போன்று தமிழகத்திலும் ‘லோக்ஆயுக்தா‘ அமைப்பை அமைக்க வலியுறுத்தி SDPI தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் (ஜுலை 7,2011) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. அவ்வகையில் வட சென்னை மாவட்டம் சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு SDPI யின் மாநிலத் தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வட-சென்னை மாவட்ட தலைவர் S.அமீர், பொதுச் செயலாளர் முஹம்மது ரஷீத், செயலாளர் ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத்தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி, தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி பேசினார்.250அவர் தனது உரையில், ‘இன்று நாடு எதிர்கொள்ளும் பெரும் அபாயமாகவும், சவாலாகவும் ஊழல் மற்றும் கருப்பு பணமும் உள்ளது. இதற்கெதிராக நாட்டு மக்கள் அனைவரும் போராட வேண்டும். ஊழல் 10 கோடி 20 கோடி என்பது இன்று 100 லட்சம் கோடி என்ற அளவிற்கு முறைகேடுகளும், ஊழலும் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. சமீபத்தில் வெளிவந்துள்ள K,G ஊழல் மூலம் நாட்டிற்கு 100 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுளளதாக (கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் ஊழல்) C.A.G.தனது தணிக்கை அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. 1966 ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான A.R.C எனப்படும் நிர்வாக மறு ஆய்வுக்குழு ஊழலை கட்டுப்படுத்த 2 பரிந்துரைகளை செய்தது.
ஒன்று, ‘லோக்பால்‘ - மத்திய அரசு தான் வாக்குறுதியளித்தபடி ஜுலை 30 க்குள் சரியான முறையில் லோக்பால் மசோதாவை அமுல்படுத்த வேண்டும். மற்றொன்று, ‘லோக் ஆயுக்தா‘. இதை 10க்கும் மேற்பட்ட மாநிலங்கள் அமுல்படுத்தியுள்ளன. இதில் பல்வேறு குறைகள் இருப்பினும் அதன் குறைகளை அகற்றி மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக - நடவடிக்கை எடுக்கும் உரிய அதிகாரத்துடன் தமிழகத்திலும் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும். என கோரிக்கை விடுத்தார். மேலும், ‘இந்த கோரிக்கையை அனைத்து வகையிலும் நாங்கள் வலியுறுத்துவோம், தொடர்ந்து போராடுவோம். அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும், தமிழக உள்துறை செயலாளரையும் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். ஊழலுக்கு எதிராக SDPI தொடர்ந்து போராடும். அதற்கு அனைவரும் துணைநிற்க வேண்டும்.‘ எனக் கேட்டுக் கொண்டார். லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமைக்க வலியுறுத்தியும், ஊழலுக்கெதிராகவும் தொண்டர்கள் கோஷங்களை முழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராயல் கரீம், துணைத்தலைவர் ஜாகிர் ஹீசேன், தொகுதி கமிட்டி தலைவர்கள் அமீர் சுல்தான், காஜா முகைதீன், ஜியாவுல் ஹக் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொகுதிக் கமிட்டி செயலாளர் ரத்தினம் நன்றியுரையாற்றினார்.