விலைவாசி உயர்வை கண்டித்தும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தமிழ்நாடு மாநில தலைவர் கே கே எஸ்எம் தெஹ்லான் பாகவி வெளியிட்ட கண்டன அறிக்கையில்,
மத்திய அரசு பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவில் 7 ரூபாய் 50 காசுகள் உயர்த்தி பொதுமக்களின் மீது கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் மாத்திரம் 17 முறை பெட்ரோலிய பொருட்களின் மீது விலை உயர்வை அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும், வங்க தேசம் உள்ளிட்ட சிறிய நாடுகளே அதனை சமாளித்து இந்தியாவை விட குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை செய்கின்றன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததற்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம். அதன் சுமையை மக்களிடம் திணிப்பது நியாயம் இல்லை.
பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் பன் மடங்கு உயரும். ஏற்கனவே மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையினால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு அறிவிப்பு மக்களுக்கு பேரிடியாகவே அமையும்.
இது போன்ற விலை உயர்வு அறிவிப்புகள் மீண்டும் மதவாத பாஜக வை ஆட்சியில் அமர்த்தவே உதவும் என்பதை காங்கிரஸ் உணர்ந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப பெட்ரோலிய பொருட்களின் விலையை மாற்றி அமைக்கும் உரிமையை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.
தாறுமாறாக விலை உயர்வை அறிவித்துவிட்டு மக்கள் கொந்தளிக்கும் போது, சிறிய அளவிலான விலை குறைப்பு நடவடிக்கையை அறிவித்து மக்களை ஏமாற்றும் போக்கை இம்முறை மத்திய அரசு செய்யாமல் முற்றிலுமாக இந்த விலை ஏற்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.
மத்திய அரசின் இந்த மக்கள் விரோத விலை ஏற்ற அறிவிப்பை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து மக்களை ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். எஸ்.டி.பி.ஐ மத்திய அரசின் இந்த விலை ஏற்ற அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
0 Reactions to this post
Add CommentPost a Comment