Wednesday, May 23, 2012

////

SDPI - ன் போராட்ட அறிவிப்பு

கூடங்குளம் போராட்டம் - மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும்.
மே 25ல் SDPI சென்னையில் ஆர்ப்பாட்டம்


கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 6 மாத காலமாக தன்னெழுச்சியோடு போராடி வருகின்றனர். 



உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் அணு உலையை மூடிவரும் நிலையில், உலகம் அணு உலையின் ஆபத்துக்களை கண்டு வரும் இத்தருணத்தில் மக்களின் அச்சம் இயற்கையானதே!



பொதுமக்கள் மாத்திரமின்றி நாடு முழுவதும் முன்னாள் நீதிபதிகள், உயர் பதவி வகித்த அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தளபதிகள், விஞ்ஞானிகள், சமூக, அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அணு உலைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் அணி திரண்டு வருவது போராட்டக்காரர்களின் கோரிக்கைகளின் நியாயத்தை உணர்த்துகிறது. 



ஜனநாயக ரீதியாக போராடி வரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணிப்பதும், அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதும், வழக்குகள் தொடுப்பதும் ஜனநாயக அரசுகளுக்கு உகந்ததல்ல.


 
எனவே கூடங்குளம் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும். பழி வாங்கும் நோக்குடனும், அரசியல் ரீதியாகவும் போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் எந்த நிபந்தனையுமின்றி அரசு திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். 



இக் கோரிக்கைகளை வலியுறுத்தி மே-25ல் சென்னை மெமோரியல் ஹால் முன்பு மாலை 4 மணியளவில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறது. நீதிக்கான இப்போராட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். 



இப்படிக்கு
கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி
மாநில தலைவர் 
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா 

தமிழ்நாடு



0 Reactions to this post

Add Comment

    Post a Comment